கன்னியாகுமாரியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை அடுத்த ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இளம்பெண் மாயமான பின் அவரது குடும்பத்தினர் குளச்சல் மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் இருவரையும் வலைவீசி தேட, காவல்துறையினர் தேடுவதை அறிந்ததும் காதலன் இளம்பெண்ணை கை விட்டு தலைமறைவாகிவிட்டான்.
பின் இளம்பெண்ணை மீட்ட காவல் துறை பெண் அதிகாரிகள் அவரை குளச்சல் மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின் இளம் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் பரிசோதனை முடிவு வெளியானதில், இளம்பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தினத்தன்று மகளிர் காவல்நிலையத்தில் 7 அதிகாரிகள் பணிபுரிந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டனர். தனிமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் காவல் நிலையத்திலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. அதேபோல் பெண்ணுடன் இருந்த காதலனும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவரது வீட்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.