இலங்கையில் அமைச்சர்கள் 26 பேரின் ராஜினாமாவை அதிபர் கோட்டபாய ராஜபக்ச ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து மக்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் அதிகரித்ததால் அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் கொழும்பு நகரத்தின் வீதிகளில் தீவிர சோதனை பணியை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இலங்கை அமைச்சரவையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நள்ளிரவில் நடந்தது. அப்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில், அதிபர் கோத்தபாய ராஜபக்சே, அவரின் சகோதரர் மற்றும் பிரதமரான மஹிந்த ராஜபக்சே தவிர பிற அமைச்சர்கள் 26 பேரும் ராஜினாமா செய்ததாக கல்வியமைச்சர் கூறியிருக்கிறார்.
அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை அதிபர் கோட்டபாய ராஜபக்சே ஏற்றுக்கொண்டார்.