தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரையிலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தற்போது பள்ளி கல்வித்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருக்கிறது. இதனால் பள்ளிக் கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது. தேவைப்பட்டால் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியோடு அரை நாள் சிறப்பு வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை என்ன தான் உத்தரவு பிறப்பித்தாலும் மாநிலம் முழுவதும் உள்ள பல பள்ளிகளில் விடுமுறை தினங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. மேலும் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கிறார்களே தவிர, யாருமே மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்வதில்லை என கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.