1.ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம் தந்தை இசைக்கலைஞர். காலஹஸ்தி பள்ளியில் எஸ்எஸ்எல்சியும் ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யூ.சி முடித்தார். பாலசுப்பிரமணியம் தனது இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
2.தெலுங்கு சங்கம் நடத்திய பாட்டுப்போட்டி 3 ஆண்டுகள் முதல் பரிசு வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கமாக கொண்டிருந்தனர். முதல் இரண்டு ஆண்டுகள் பாலசுப்பிரமணியம் முதல் பரிசைப் பெற மூன்றாம் ஆண்டு வெற்றி பெற்றால் வெள்ளிக் கோப்பை கொடுக்க வேண்டி வரும் என வேண்டுமென்றே இரண்டாவது பரிசை அறிவித்தனர். ஆனால் அப்போட்டியில் தலைமை தாங்கிய பிரபல பின்னணி பாடகியான எஸ் ஜானகி பாலசுப்பிரமணியம் தான் அனைவரையும் விட நன்றாகப் பாடினார் என வாதாடி முதல் பரிசைப் பெற்றுக் கொடுத்தார்.
3.சென்னை பொறியியல் கல்லூரியில் தனக்கு இடம் கிடைக்காததால் தொழில் கல்வியை பயின்றார். 1966ஆம் ஆண்டு கோதண்டபாணி இசைத்த தெலுங்கு படத்தில் பாலசுப்ரமணியம் முதன்முதலாக பாடினார். அதனைத் தொடர்ந்து பல பாடல்களை அவர் பாடத் தொடங்கினார்.
4.தமிழில் இவர் முதன்முதலாக பாடல் பாடியது சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் தான். ஆனால் அத்திரைப்படம் வெளிவரும் முன்னரே எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த அடிமைப்பெண் படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளி வந்துவிட்டது.
5.ஏராளமான வாய்ப்புகள் குவிய இளையராஜா, எம் எஸ் விஸ்வநாதன், யுவன்சங்கர், எஆர் ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உட்பட அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.
6.கர்நாடக இசையை முறையாக பயிலாத பாலசுப்பிரமணியம் சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடல்களை மிகவும் சிறந்த முறையில் பாடி உலகம் முழுவதிலும் பிரபலமானவர் ஆனார் அத்திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
7.தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் எந்த மொழியில் பாடல் பாடினாலும் இயல்பான உச்சரிப்புடன் பாடுவதே இவரது சிறப்பு அம்சம்.
8.40 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக பாடி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்தவர். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை ஆறு முறை பெற்றவர்.
9.கர்நாடக தமிழக அரசுகளின் பல விருதுகளையும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி விருது வாங்கியவர்.
10.1981 ஆம் ஆண்டு பெங்களூரில் இருந்த ரெக்கார்டிங் தியேட்டரில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 21 கன்னட பாடல்களை இசையமைப்பாளர் உபேந்திர குமார் என்பவருக்காக பாடி சாதனை புரிந்தார். 19 பாடல்களை தமிழில் ஒரே நாளில் பாடிய சாதனையும் இவருக்கு உண்டு. ஆறு மணி நேரத்தில் 16 ஹிந்தி பாடல்களை பாடியவர் இவர்.
11.ரஜினி கமல் பாக்யராஜ் உட்பட பலருக்கும் பல மொழி படங்களில் பின்னணி குரல் கொடுத்தவர் பாலசுப்ரமணியம்.
12.தென்னிந்திய மொழிகளில் 70க்கும் அதிகமான படங்களில் தனது நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தியுள்ளார் கன்னடம் தெலுங்கு தமிழ் இந்தி ஆகிய மொழிகளில் 45க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
13.நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பின்னணி பாடிய ஒரே பாடகர் என்ற பெருமை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை சேரும். அரை நூற்றாண்டைக் கடந்த இவர் இன்றும் இளமை துள்ளலுடன் தனது சாதனைகளை தொடர்ந்து வருகின்றார்.