தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஃபாலோ ஆன் பெற்று விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்றுவரும் நான்கு போட்டிகள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றிருந்தன.
இதனிடையே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசெபெத்தில் உள்ள செயிண்ட் ஜார்ஜியா பார்க் மைதானத்தில் கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 499 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக அறிமுக வீரர் ஒலி போப் 135*, பென் ஸ்டோக்ஸ் 120 ரன்களைக் குவித்தனர். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் கேசவ் மஹராஜ் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் குவிண்டன் டி காக் (63) தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிய ஸ்கோரை எட்டவில்லை. குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸின் கடைசி 27 நிமிடங்களில் 28 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்து கடைசி நான்கு விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து தரப்பில் டோமினிக் பெஸ் 5, ஸ்டூவர்ட் பிராடு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனால் ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த அணி தற்போது தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பீட்டர் மாலன் (12), டூபிளெஸ்ஸிஸ் (36), வேன் டர் டசன் (10), டி காக் (3) உள்ளிட்ட முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதனால் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்களை எடுத்துள்ளது. பிலாண்டர் 13 ரன்களுடனும் கேசவ் மஹராஜ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தை விட 188 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது. அதே வேளையில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே தேவை உள்ளது.
இந்தப் போட்டியின்போது கடந்த இரண்டு தினங்களாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. எனவே ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் மழை பெய்தால் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியும்.
STUMPS in Port Elizabeth!
England's day. They reduce South Africa to 102/6 after enforcing the follow-on.
Joe Root returns career-best Test figures of 4/31 🤯#SAvENG SCORECARD ▶️ https://t.co/5Y63KfGrCc pic.twitter.com/tlTfkGyeO7
— ICC (@ICC) January 19, 2020