தென் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் கேப்டவுன் என்ற நகரத்தின் நாடாளுமன்ற கட்டிடத்தில் கோர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
பாராளுமன்றத்தின் வளாகத்தில் இருக்கும் பழைய பிரிவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென்று தீ பற்றி எரிந்தது. மூன்றாவது மாடியில் இருக்கும் அலுவலகங்களில் அதிகாலை நேரத்தில் பற்றி எரிய தொடங்கிய தீ, தேசிய சட்டமன்ற அறை வரை வேகமாக பரவியது. இதில் மேற்கூரை இடிந்து விழுந்ததோடு, கட்டிடத்தில் இருக்கும் ஒரு தளம் முழுமையாக எரிந்து தீக்கிரையானது.
இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த, நாடாளுமன்ற கட்டிடத்தில் அரிய வகை புத்தகங்கள் மற்றும் ஏற்கனவே சேதமான, Die Stem van Suid-Afrika என்ற முன்னாள் ஆப்பிரிக்க தேசிய கீதத்தின் அசல் பதிப்பும் இருக்கிறது.
தீப்பற்றி எரிந்ததில் அதிக புகைமூட்டம் ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதா? என்பது தெரியபடுத்தப்படவில்லை.
எனினும், இதில் உயிர் பலிகள் ஏற்படவில்லை. இந்த விபத்து தொடர்பில் கட்டிடத்தில் இருக்கும் 51 வயது நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.