சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிரான தொடர் போராட்டத்தால் உள்நாட்டு போர் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் 1989 முதல் 2019 வரை ஒமர் அல்-பஷீர் அதிபராக செயல்பட்டார். மேலும், மக்கள் போராட்டம், இராணுவ கிளர்ச்சியின் காரணமாக ஒமர் அல்-பஷீர் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், பொதுமக்கள் மற்றும் இராணுவம் கலந்த கூட்டணி ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார்.
இதனை தொடர்ந்து, கடந்த 25 ஆம் தேதி கூட்டணி ஆட்சிக்கு எதிராக ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அப்துல்லா ஹம்டோ மற்றும் அரசு உறுப்பினர்களையும் இராணுவம் சிறைபிடித்தது. இதற்கு பின் இராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் ஆட்சியை கைப்பற்றினார். இந்த இராணுவ ஆட்சியை எதிர்த்து சூடான் மக்கள் வீதிகளில் இறங்கி போராடியதால் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவைகளை துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். தற்போது, இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதால் சூடானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.