அரசு உத்தரவை மீறி விற்பனை செய்துகொண்டிருந்த கடைகளுக்கு சீல் வைத்ததோடு மட்டுமில்லாமல் மூன்று கடைகளுக்கு ரூபாய் 15 அபராதம் வசூலிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. .
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் அங்கு 300க்கும் அதிகமானோர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து நகராட்சி ஆணையர் சுபாஷினி, வருவாய் அலுவலர் ஸ்ரீதேவி, சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முறையாக கடைப்பிடிக்கின்றனரா என்பதை அறிய தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் அமைந்துள்ள டீக்கடையில் பல பேர் ஒன்று கூடி கூட்டமாக டீ அருந்தி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அதிகாரிகள் அந்த கடையை பூட்டி உடனடியாக சீல் வைத்துள்ளனர். இதனையடுத்து அரசு அறிவித்த உத்தரவை மீறி விற்பனை செய்துகொண்டிருந்த நகை, மருந்து, ஜவுளி போன்ற கடைகளுக்கு ரூபாய் 5,000 அபராதம் விதித்து மொத்தம் 15,000 ரூபாயை அதிகாரிகள் வசூலித்தனர். மேலும் நகராட்சி ஆணையர் சுபாஷினி இது போன்று மறுபடியும் இன்னொரு முறை செய்தால் அதிரடியாக கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.