சென்னையில் மாதவரம் பகுதியில் மர்ம நபர்கள் 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை வீட்டின் முன்பு வீசி செல்வது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் மார்ச் மாதம் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மூன்றாவது முறையாக மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதி வரை முழுமையாக அமல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதனால் மாநகராட்சியும் கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் சென்னை மாதவரம் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு முன்னால் மர்மநபர்கள் ரூபாய் நோட்டுகளை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அப்பகுதியில் இருக்கும் மாணிக்கம் தெருவில் இருக்கும் சில வீடுகளின் முன்பு 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை சைக்கிளில் வரும் சிலர் வீசி செல்வதை பொதுமக்கள் பார்த்திருக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் “சைக்கிளில் வரும் நாலைந்து பேர் இதனை செய்கின்றனர்.
நாங்கள் சத்தம் போடவும் அவர்கள் தப்பி ஓடி விடுகிறார்கள். பணத்தை தூக்கி வீசி செல்லும் அவர்களை பார்க்க வட இந்தியாவை சேர்ந்தவர்கள் போன்று இருக்கிறது. என்ன காரணத்திற்காக இவ்வாறு அவர்கள் பணத்தை போட்டு செல்கிறார்கள் என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளனர். அப்பகுதிக்கு உட்பட்ட மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து எந்த புகாரும் இதுவரை பதிவாகவில்லை என கூறுகிறார்கள்.