சொகுசு கார் பின்னோக்கி சென்று கிணற்றுக்குள் விழுந்த விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் விவசாயியான ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மகளும், பிரதீப் குமார் என்ற மருமகனும் இருக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு நகுல் கிருஷ்ணன் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பிரதீப் குமார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த புதிய சொகுசு காரை ஓட்டி பார்ப்பதற்கு ஈஸ்வரன் ஆசைப்பட்டுள்ளார். அதன்பிறகு தனது பேரனான நகுல் கிருஷ்ணனை ஏற்றிக் கொண்டு ஈஸ்வரன் காரை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் ஆட்டோமேட்டிக் கியர் வசதி கொண்ட அந்த சொகுசு காரில் பின் நோக்கி செல்வதற்கான கியர் விழுந்துள்ளது. இதனால் ஈஸ்வரன் காரை இயக்கியதும் வேகமாக பின்னோக்கி சென்ற கார் அப்பகுதியில் இருந்த 40 அடி ஆழமுடைய கிணற்றின் தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்து விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி படுகாயமடைந்த ஈஸ்வரன் மற்றும் நகுல் கிருஷ்ணனை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நகுல் கிருஷ்ணனை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஈஸ்வரனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.