பெண்ணிடமிருந்து சங்கிலியை பறிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடக்குவெளி கிராமத்தைச் சார்ந்தவர் தர்மலிங்கம்-மீனா தம்பதியினர். மீனா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு வடக்குவெளி கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீனாவிடம் தனது மோட்டார் சைக்கிளில் ஏறுங்கள் ஊருக்குள் சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய மீனா மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்ததும் அவர் கிராமத்தை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.
பின்பு கண்ணாடி வழியாக அந்த நபர் மீனா கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பார்த்துக்கொண்டே வந்துள்ளார். இதனை அறிந்த மீனா சந்தேகமடைந்து மோட்டார் சைக்கிளை நிற்குமாறு கூறியுள்ளார். அந்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியதும் கீழே இறங்கி மீண்டும் கிராமத்தை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளார். மீனாவை பின்தொடர்ந்து வந்த அந்த நபர் திடீரென மீனா அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். சுதாரித்துக்கொண்ட மீனா “திருடன் திருடன்” என கூச்சலிட்டதை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து திருடனை மடக்கிப் பிடித்துள்ளனர்.
பின்பு வேட்டவலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருடனை அழைத்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பேட்டையைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்துள்ளது. மீனா அணிந்திருந்த கவரிங் சங்கிலியை தங்கச் சங்கிலி என நினைத்து அதை பறிக்க முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் காவல்துறையினர் குமாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.