துருக்கி நாட்டில் ஒரு விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு ஒன்றின் தலை இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி நாட்டின் தலைநகரான அங்காராவிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு கடந்த 21ஆம் தேதி அன்று ஒரு விமானம் புறப்பட்டிருக்கிறது. அந்த விமானத்தின் பணியாளர்களுக்கு சாப்பாடு கொடுக்கப்பட்டது. அப்போது ஒரு பணியாளர் தன் உணவில் காய்கறிகளோடு பாம்பின் தலை கிடந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.
உடனே அதனை வீடியோ எடுத்து தன் ட்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டார். உரிய விமான நிறுவனம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டது. இதனை ஏற்கவே முடியாது என்று கூறிய விமான நிறுவனம், தங்களுக்கு உணவு விநியோகிக்கும் நிறுவனத்தினுடனான ஒப்பந்தத்தை நிறுத்திக் கொண்டது.
https://twitter.com/DidThatHurt2/status/1551743925047754752
ஆனால் உணவு விநியோகிக்கும் நிறுவனமானது, நாங்கள் அளித்த உணவில் பாம்பின் தலை இல்லை என்று மறுத்திருக்கிறது. தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் 280 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடாக்கப்படுகின்றன. அந்த பாம்பின் தலை பாதி வேகாத நிலையில் இருக்கிறது.
எனவே, நாங்கள் உணவு தயாரித்த பின் யாரோ வேண்டுமென்று அதனை வைத்திருப்பார்கள் என்று கூறியுள்ளது. மேலும், விமான நிறுவனம் கூறுகையில், விமான சேவையில் 30 வருடங்களை தாண்டி பணிபுரிந்து கொண்டிருக்கிறோம். எங்கள் விமான பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளை கொடுப்பது தான் எங்களது நோக்கமாக இருக்கிறது.
வசதியாக அவர்கள் பயணிக்க வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். இந்த பிரச்சனை குறித்து தெளிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியிருக்கிறது.