கள்ளக்குறிச்சியில் வளர்ச்சிக்கான கருத்துகேட்பு கூட்டத்தில் மக்கள் விடுத்த அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று MP கவுதமசிகாமணி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அதன் வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்களை நிறைவேற்றலாம் என்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரோட்டரி சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், மருத்துவர்கள் சங்கம், பொதுநல சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்க உறுப்பினர்களும், பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்திற்கு அப்பகுதி எம்பி கவுதமசிகாமணி தலைமை தாங்க, அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பேசிய அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர், சின்ன சேலம் to கள்ளிகுறிச்சி வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த பாதை பொதுமக்கள் பயணத்திற்கு பயன்படுவதோடு சேலத்திற்கு நாள்தோறும் காய்கறி பழங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய வியாபாரிகளுக்கு ஏதுவாக இருக்கும் என்று கூறினார். இதை தொடர்ந்து பேசிய ரோட்டரி சங்க நிர்வாகி உளுந்தூர்பேட்டை to கள்ளக்குறிச்சி வரை இருக்கக்கூடிய புறவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றி விட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து பேசிய மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள், கள்ளக்குறிச்சி ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய பொதுமக்கள் கள்ளக்குறிச்சி பகுதி அருகே உள்ள கோமுகி அணையில் இருந்து வரக்கூடிய நீர் வனத்துறைக்கு சொந்தமான பாதை வழியாக ஏரியை வந்தடையும். ஆனால் தற்போது அந்தப் பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி திசைமாறி ஏரிக்கு வந்து சேர்வதில்லை.
எனவே அந்த பாதையை சீரமைத்து ஏரியை நிரப்புவதற்கான வழியை செய்ய வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சியில் தொழிற்சாலை ஒன்றை வடிவமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட எம்பி கவுதமசிகாமணி மக்களின் அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.