கோழியை சுத்தம் செய்யும் எந்திரத்தை துடைத்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் காஜா மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழி இறைச்சி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு முகமது அசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தந்தையின் கடைக்கு சென்ற முகமது அசன் அவருக்கு உதவியாக இருக்கும் என நினைத்து அங்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து கோழியை சுத்தம் செய்யும் இயந்திரத்தை முகமது அசன் துடைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த மாதவரம் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.