ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கு எதிராக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது.
ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுகள் நேற்றோடு முடிவடைந்து விட்டன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.. சூப்பர் 4 சுற்றில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் ஒருமுறை மோத வேண்டும் இதன் முடிவின்போது முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிகள் நுழையும். இந்நிலையில் இன்று சார்ஜா மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக ஆட நல்ல தொடக்கம் கிடைத்த நிலையில், தில்ஷான் மதுஷங்கா வீசிய 5ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஜஸாய் 13 ரன்னில் போல்டாகி வெளியேறினார். பின்னர் வந்த இப்ராஹிம் சத்ரான் -ரஹ்மானுல்லா ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடியது.
ஒருபுறம் சத்ரான் பொறுப்பாக ஆட மறுமுனையில் இலங்கை பந்துவீச்சை ரஹ்மானுல்லா அரைசதம் கடந்து விளாசி தள்ளினார்.. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 45 பந்துகளில் 6 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்த ரஹ்மானுல்லா 16ஆவது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து 40 ரன்கள் எடுத்திருந்த இப்ராகிம் சத்ரானும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் முகமது நபி 1 ரன்னில் ஆட்டமிழக்க, 19ஆவது ஓவரில் நஜிபுல்லா சத்ரான் 17 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆனார்..
அசிதா பெர்னாண்டோ வீசிய கடைசி ஓவரை ரஷீத் கான் எதிர்கொள்ள முதல் 3 பந்தில் ரன் வரவில்லை, அடுத்த பந்து 2 ரன் எடுக்க 5ஆவது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். லாஸ்ட் பந்தில் அடித்து விட்டு 2 ரன் ஓட ரன் அவுட் ஆனார். கடைசி ஓவரில் 9 ரன் கிடைத்தது. இறுதியில் 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 7விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்கா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து இலங்கை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.