படகு கவிழ்ந்து 13 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்த 6 பேரை சக மீனவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்திலிருந்து நேற்று காலை 3 மணியளவில் டோமினிக் என்பவரின் படகில் மீன்பிடிக்கச் சென்ற டோமினிடக், ராஜ், இசக்கி ராஜா, ராஜ், சூசை, இளங்கோ ஆகிய ஆறு மீனவர்கள் கூடங்குளம் அருகே 16 நாட்டிக்கல் மைலின் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் அதிகக் காற்று வீசியபோது படகில் ஏற்பட்ட ஓட்டையால் கரை திரும்ப முயன்றனர்.
இந்நிலையில், நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 13 மணி நேரம் ஆறு மீனவர்களும் உயிருக்குப் போராடி தத்தளித்தனர். இரவு 11 மணியளவில் அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அவ்வழியாக மீன் பிடிக்க வந்த புன்னக்காயலைச் சேர்ந்த எடிசன் என்பவர், கடலில் தத்தளித்த மீனவர்களைக் காப்பாற்றினார்.
இதனையடுத்து ஆறு மீனவர்களும் புன்னக்காயல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அதிக நேரம் கடலில் தத்தளித்ததாலும் அதிக தண்ணீர் குடித்த காரணத்தினாலும், மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகையில், ‘ 7 லட்சம் மதிப்புள்ள வல்லம், வலை, ஜிபிஎஸ் கருவி சொல்போன் உள்ளிட்ட சாதனங்கள் கடலில் மூழ்கியதால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு தொடர்ந்து மீன் தொழில் செய்ய உதவ வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.