கொரோனா தொற்று கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கியது. இதையடுத்து இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகளை உலகநாடுகள் முடக்கி விட்டன. இந்த நிலையில் அமெரிக்கா, கியூபா, சீனா உள்ளிட்ட நாடுகளில் சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் இந்தியாவில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பரிசோதனைகள் நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், சுவிட்சர்லாந்தில் 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர்-பயோன்டெக்கின் காமிர்னடி தடுப்பூசி போட சுவிஸ் மருந்து நிறுவனமான சுவிஸ்மெடிக் ஒப்புதல் வழங்கியுள்ளது.
5 முதல் 11 வயது உடையவர்களுக்கு இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை மருத்துவ பரிசோதனை முடிவுகள் காட்டுகின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசியின் பக்க விளைவுகள் பெரியவர்களைக் காட்டிலும் குறைவாகவே நிகழ்கின்றன. மேலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் செலுத்தப்பட்ட இடத்தில் வலி, சோர்வு, குறைவாக அடிக்கடி தலைவலி மற்றும் மூட்டு வலி போன்ற சாதாரண பிரச்சினைகள் எதிர் கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.