நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறு சிறு கோயில்கள் மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் நோய் தொற்றின் நிலைமையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் இருக்கின்ற சிறிய திருக்கோயில்கள், சிறிய மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் போன்ற வழிபாட்டு தலங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அனுமதி பெற்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு ஏற்கனவே வெளியிட்ட நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின் தொடர்ந்து, தற்போது மாநகராட்சி பகுதிகளிலும் இருக்கின்ற சிறிய திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், சிறிய தேவாலயங்கள் அனைத்திலும் வருகின்ற ஆகஸ்டு 10ஆம் தேதி முதல் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை எண் 044 2766 4177 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்” என்று அவர் கூறியுள்ளார்.