சிரியாவில் இராணுவ பேருந்து மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.
சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் உள்நாட்டு போரானது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் சிரியாவின் முக்கிய பகுதியான idlib மாகாணம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் சிரியா அரசுப்படை idlib மாகாணத்தை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ரஷியா அரசின் உதவியோடு சிரியா இராணுவப்படை கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை துருக்கி அரசு வழங்கி வருகிறது.
இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அரசுப்படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் அதிகரிப்பதால் இரு தரப்பினரும் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கசில் நேற்று இராணுவப்படை ஹபீஸ் அல்-அசாத் பாலத்தின் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த போது சாலையின் அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில் இராணுவ பேருந்து முழுவதுமாக சேதமடைந்தது.
இந்த குண்டுவெடிப்பில் பேருந்தில் பயணித்த இராணுவ வீரர்கள் 14 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தாகவும் தகவல் வெளியாகியது. தற்போது இந்த வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து idlib மாகாணத்தின் அரிஹா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் மீது சிரியா அரசுப்படை வான்வழி தாக்குதல் நடத்தியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 குழந்தைகளும் அடங்குவர் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) அறிவித்துள்ளது.