கொரோனா நிவாரண தொகையாக 19 திருநங்கைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் காசோலையை அமைச்சர் வழங்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கலெக்டர் அரவிந்த் தலைமையில், அமைச்சர் மனோ தங்கராஜ் 19 திருநங்கைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண உதவி தொகையாக வழங்கினார்.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியபோது இவர்கள் சமூகத்தில் மற்றவர்களால் தள்ளிவைக்கப்பட்ட நேரத்தில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, அவர்களை அங்கீகரிக்க வேண்டும் சமூகத்தில் அவர்களுக்கும் கௌரவத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக திருநங்கைகள் என்று பெயர் சூட்டி அழகு பார்த்தார். மேலும் அவர்களுக்கு நலவாரியம் அமைத்து அவர்களின் குறைகள் கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து இன்றைக்கு திருநங்கைகள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியவர் திரு.கருணாநிதி ஆவார். அதேபோன்று தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் அனைத்து தரப்பட்ட மக்களும், தமிழக அரசின் திட்டங்கள் நிவாரண உதவிகளை பெற்று உயர்வாக வாழவேண்டும் என்ற அடிப்படையில் சிறப்பாக செயலாற்றி வருகிறார்.
கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் நிலைமையை கருதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையும், 14 வகையான மளிகைப் பொருட்களும் வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் இந்தத் திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு உதவும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் 19 திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண தொகையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது என்று அமைச்சர் தங்கராஜ் தெரிவித்துள்ளார். அப்போது விஜயகுமார் எம்.பி, எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி, கண்காணிப்பாளர் பிரின்ஸி போன்ற அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.