கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி மாவட்ட பகுதிகளில் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து மாணவ- மாணவிகளும் தடுப்பூசிக்கான சான்றிதழ் கட்டாயம் என்பதால் தடுப்பூசி செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்பின் தொழில் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான சான்றிதழை நிறுவனத்திடம் கொடுக்கவேண்டு என நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றது. இதனால் சில நிறுவனங்களில் கொரோனா சான்றிதழை கொடுத்தால் மட்டுமே பணி வழங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் பணிக்கு செல்வதை கூட நிறுத்திவிட்டு தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்போது அவர்கள் தங்களுடைய ஆதார் கார்டு மற்றும் செல்போன் எண்ணை அங்கு சமர்ப்பித்து வருகின்றனர். ஆனால் தடுப்பூசி செலுத்தும் அதிகாரிகள் சரிவர பதிவு செய்யாததால் பொதுமக்களுக்கு சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இதனால் சில பேருக்கு 20 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் சான்றிதழ் கிடைக்காமல் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வருகின்றனர். இதேபோன்று மாணவ-மாணவிகளும் சான்றிதழ் கிடைக்காததால் கல்லூரிக்கு செல்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து யாரிடம் கேட்க வேண்டும் என்று தெரியாமல் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டபோது அவர்கள் ஈரோடு மாவட்டம் காந்திஜி சாலையில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு சென்று அங்கு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டால் உடனடியாக பதிவு செய்து தருவார்கள் என்று கூறுகின்றார்கள். ஆனால் அங்கு சென்று அதிகாரிகளிடம் கேட்டால் அவர்கள் அதற்கு உரிய பதில் கொடுக்காமல் ஆதார் கார்டு மற்றும் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு பதிவு செய்து தருவதாக கூறி திருப்பி அனுப்புகின்றனர். எனவே அதிகாரிகள் முறையாக பதிவு செய்யாததால் பொதுமக்கள் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.