இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சேக்கு சிங்கப்பூரில் இரண்டு வாரங்கள் தங்க அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதால், அப்போதைய அதிபர் கோட்டபாய ராஜபக்சே, நாட்டிலிருந்து தப்பினர். அதனைத்தொடர்ந்து, கடந்த 13ஆம் தேதி அன்று மாலத்தீவிற்கு சென்ற அவர், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின் அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், சிங்கப்பூர் குடியேற்ற ஆணையமானது, கோட்டபாய ராஜபக்சேவின் பயணம் குறித்து நேற்று தெரிவித்திருப்பதாவது, கோட்டபாய ராஜபக்சே கடந்த 14ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்கு வந்தார். அவர் இரண்டு வாரங்கள் தங்க குறுகிய காலத்திற்கான அனுமதி சீட்டு அளிக்கப்பட்டது.
வழக்கமாக இலங்கையிலிருந்து வருபவர்களுக்கு ஒரு மாத காலம் வரை தங்க அனுமதி சீட்டு அளிக்கப்படும். அதற்கு மேலும் தங்க வேண்டும் எனில் இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. இதனிடையே சிங்கப்பூரில் வாழும் இலங்கையைச் சேர்ந்த மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு நாடு திரும்பி விடும் என்று நம்புவதாக கூறியிருக்கிறார்கள்.