நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், உயிர்ப்பலிகள் அதிகரிப்பதால், இணையதள சூதாட்டத்திற்கு தடை விதிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தியிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழகத்தில் மீண்டும் இணையதள சூதாட்டத்தால் உயிர்ப்பலிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இது கடும் அதிர்ச்சி மற்றும் வேதனையை தருகிறது. திமுக அரசு, ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழியில் நடக்கும் சூதாட்ட விளையாட்டுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்போம் என்று அறிவித்திருந்தது.
ஆனால், தற்போது வரை அதற்குரிய எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது, கண்டனத்திற்குரியது. எளிதான வழியில், அதிக பணத்தை சம்பாதிப்பதற்கான ஆசையை இளைஞர்களிடம் தூண்டி, அவர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்லும் இணையவழி சூதாட்ட செயலிகள், தமிழ்நாட்டின் இளைய தலைமுறையினரின் வருங்காலத்திற்கு பெரும் ஆபத்தாக மாறியிருக்கிறது.
தமிழகத்தில், தற்போது இணையதள வழியில் நடக்கும் சூதாட்ட விளையாட்டுக்களால் உயிர் பலிகள் அதிகரித்துவருகிறது. எனினும், தற்போது வரை இணையவழி சூதாட்டங்களை தடை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் திமுக ஆட்சியின் மெத்தன போக்கு அதிக ஏமாற்றத்தை தருகிறது.
எனவே, மக்களின் நலனை கருத்தில் வைத்து, இனிமேல் இணையவழி சூதாட்டங்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசினை நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்திக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.