இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடங்கி தேசிய பல்கலைக்கழக அளவிலான போட்டி வரை பதக்கங்களை குவித்த வீராங்கனைகள் கொரோனா காலத்தில் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், இரட்டை ஆறு பகுதியை சேர்ந்த அஞ்சலி ஜோசப் கடந்த 2014ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 400 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இதனை தொடர்ந்து அஞ்சலி ஜோசப் மற்றும் அவரது தோழிகளான ஆதிரா, சசி மற்றும் கீது மோகன் ஆகிய மூவரும் அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான தடகளப் போட்டியில் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இவர்கள் எர்ணாகுளம் பகுதியில் தனியார் கல்லூரியில் முதுகலை இரண்டாமாண்டு படித்து வருகின்றனர். கொரோனா காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் தங்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதற்காக தினக்கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது ஊரடங்கு காலத்தில் கிடைக்கும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றவும், தங்களுக்கு செலவுக்கான பணத்தை திரட்டவும் இவ்வாறு பணியாற்றுவதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கிடைக்க உள்ள அரசு வேலைக்காக காத்திருப்பதாகவும், விரைந்து அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.