குடும்ப வறுமையால் மனமுடைந்த வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஊராட்சியில் பூமி கோட்டை பகுதியை சேர்ந்த கோபால்- கண்ணம்மா வயதான தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஊராட்சியில் பணிபுரிந்து வந்த கண்ணம்மா ஓய்வு பெற்ற பிறகு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதில் 100 நாள் மட்டும் வேலை செய்து வந்ததால் மற்ற நாட்களில் பணம் இல்லாமல் வறுமையில் வாடினார். இதன் பிறகு ஊராட்சி தூய்மை பணியில் தினக்கூலியாக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருடைய கணவர் கோபால் சிறுநீரக கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டார்.
இதனால் அவருடைய மருத்துவ செலவுக்கு அடிக்கடி பணம் தேவைப்பட்ட நிலையில் கண்ணம்மா கடன் வாங்கி குடும்பத்தையும் , கணவரையும் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் வேலைக்குப் போக முடியாமலும் ,பணம் இல்லாமலும் வறுமையால் மிகவும் சிரமம் அடைந்த வயதான கணவன் – மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் கண்ணம்மாவுக்கு ரூபாய் 7400 சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால் இந்த பணத்தை கண்ணம்மா கடன் வாங்கியவர்களிடம் திருப்பி செலுத்தினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் கண்ணம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபாலை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் தற்கொலை செய்துகொண்ட கோபால் – கண்ணம்மா ஆகியோரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.