நடிகர் சித்தார்த்தின் ட்விட்டர் பதிவு சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பேட்மிண்ட்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் அவர் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
பேட்மிண்ட்டன் வீராங்கனை சாய்னா நேவால், பஞ்சாப்பிற்கு வருகை தந்த பிரதமர் மோடியின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில், ஒரு நாட்டின் பிரதமருக்கு பாதுகாப்பு இல்லையெனில், அதை எவ்வாறு பாதுகாப்பான நாடு என்று கூற முடியும்? பிரதமருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்களை கடுமையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்து நடிகர் சித்தார்த் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவரின் கருத்திற்கு பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் சித்தார்த், சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, “சமீபத்தில் உங்கள் ட்விட்டிற்கு நான் தெரிவித்த மூர்க்கத்தனமான நகைச்சுவைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நான் பல விஷயங்களில் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம். உங்களின் கருத்தை படித்தபோது எனக்கு கிடைத்த ஏமாற்றம் அல்லது கோபத்தினால், நான் பயன்படுத்திய வார்த்தையை நியாயப்படுத்த முடியாது. என்னால், அதை விட சிறப்பாக பேசியிருக்க முடியும் என்று எனக்கு தெரியும்.
https://twitter.com/Actor_Siddharth/status/1480962679032324097
எந்த ஒரு நகைச்சுவையையும் விளக்க வேண்டிய நிலை வந்தால், அது ஒரு நல்ல நகைச்சுவை இல்லை. எனவே, அந்த நகைச்சுவைக்காக என்னை மன்னிக்க வேண்டும். நான் பயன்படுத்திய வார்த்தை, விளையாட்டு மற்றும் நகைச்சுவையானது. அதில், எல்லோரும் கூறும் விதத்தில் உள்நோக்கம் எதுவுமில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நான் என்றும் பெண்ணியவாதிகளின் பக்கம் நிற்பவன். ஒரு பெண்ணாக உங்களை தாக்கக் கூடிய நோக்கம் எனக்கு நிச்சயம் இல்லை. இதோடு இந்த விஷயத்தை விட்டுவிடுவோம் என்று நம்புகிறேன். நீங்கள் இதனை ஏற்றுக் கொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நீங்கள் எப்போதும் எனது சாம்பியனாக இருப்பீர்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.