மத்திய பிரதேசத்தில் செல்பி எடுக்க முயன்ற எம்பிபிஎஸ் மாணவி மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சிலிக்கான் சிட்டி என்ற பகுதியை சேர்ந்த நேஹா அர்சி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது சகோதரர்களுடன் நேற்று மாலை 7 மணி அளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் நடைபயிற்சி செய்துள்ளார். பின்னர் தனது சகோதரரை ஏதாவது தின்பண்டம் வாங்கி வருமாறு அனுப்பி வைத்துவிட்டு, மேம்பாலத்தில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். பின்னர் மேம்பாலத்தில் சுவர் மீது ஏறி நின்று செல்பி எடுத்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த நேஹாவை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைப்பார்த்த நேஹாவின் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியது. செல்பி மோகத்தால் புகைப்படம் எடுக்கும்போது மேம்பாலத்தில் இருந்து மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.