இந்தியாவை பொறுத்த வரை சுற்றுச்சூழல் பாதிப்பால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய பசுமை அமைப்பு சுற்றுச்சூழல் தொடர்பாக ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் அணல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எரி பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்து மோசமடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழப்பதுடன் பலர் நோய்க்கு ஆளாவதும் அதிகரித்து இருப்பதாக கூறி உள்ளனர். இந்தியாவை பொறுத்த வரை இந்த வகை சுற்றுச்சூழல் பாதிப்பால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்ல, 9 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு சுற்றுச்சூழல் மாசுவினால் குறை பிரசவம் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
காற்று மாசு அதிக அளவில் ஆஸ்துமா நோயாளிகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளை ஆஸ்துமா தாக்குகிறது. சுமார் 12 லட்சத்து 85 ஆயிரம் குழந்தைகள் ஆஸ்துமாவோடு வாழும் நிலை உள்ளது.
மேலும் பல்வேறு நோய்களையும் அவை உருவாக்குகின்றன. பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றுக்கும் காற்று மாசு காரணமாக உள்ளது. இத்துடன் பொருளாதார ரீதியாகவும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலக அளவில் பார்க்கும் போது காற்று மாசு காரணமாக 2.9 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில் இழப்பு ஏற்படுகிறது. இது, ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாகும்.
இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதை தவிர்க்க மரபு சாரா எரிசக்தி முறைகளை அதிக அளவில் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கூறி இருக்கிறது.