மகாராஷ்டிராவில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 130 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் பாலாசாகேப் தோரட் தெரிவித்தார். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாகவே பேய் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராய்கட், சத்தாரா, கோந்தியா, சந்திரபூர், ரத்னகிரி, புனே, பால்கர், நாக்பூர் போன்ற மாவட்டங்கள் மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடலோர மாவட்டமான ராய்கட்டில் உள்ள தலாய் எனும் கிராமத்தில் கடந்த வியாழன் அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 36 வீடுகள் மீது பாறைகள் சரிந்து நசுக்கியது.
இந்த கோர நிகழ்வில் 47 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர், மேலும் 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும் அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ராய்கட் மட்டுமல்லாமல் சத்தாரா மாவட்டத்திலும் கடுமையாக வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் இடிந்தும், பல்வேறு நிகழ்வுகளிலும் அங்கு 27 பேர் பலியாகி உள்ளனர். வழக்கத்திற்கு மாறாக 10 முதல் 12 நிலச்சரிவுகள் வரை ஏற்பட்டிருப்பதாகவும் இது கவலையளிப்பதாகவும் அமைச்சர் பாலாசாகேப் தோரட் தெரிவித்தார்.
இதனிடையே, ஏற்கனவே மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் 6 மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கடுமையான மழைப்பொழிவு இருக்கும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வெள்ள சேதத்தை அடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த 18 அணிகள் மீட்பு நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டுள்ளன. புனே மற்றும் கோவாவில் மேலும் 6 அணிகள் களமிறக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து 15 ராணுவ அணிகளும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.