சென்னையில் இன்று ஒரே நாளில் 7 குழந்தைகள், 5 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 7 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பிறந்து ஒரே நாள் ஆன குழந்தை, 2 மாத குழந்தை, ஒன்றரை வயது குழந்தைக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 வயது பெண் குழந்தைகள் இருவர், 3 மற்றும் 5 வயது ஆண் குழந்தைகள் உள்பட 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர். இதனிடையே சென்னையில் பெண் மருத்துவர் உட்பட 5 மருத்துவர்களுக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவர், 4 தனியார் மருத்துவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை அண்ணாசாலையில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்து உணவகம் செயல்பட்டு வந்தது ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் ஏராளமானவர்கள் இந்த உணவகத்தில் உணவுகளை வாங்கி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உணவக ஊழியர்கள், உணவு வாங்கி சென்றவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.