17 வயது மாணவிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டிநாயக்கன்பட்டியைச் சார்ந்தவர் சூர்யா. இவர் அதே பகுதியில் இருக்கும் என்ஜினீயரிங் படிக்கும் 17 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் சூர்யா திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்ததால் அவரை சூர்யா திருப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதற்கிடையே மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அவர் திருப்பூரில் இருப்பதாகவும் மாணவி நிறைமாதகர்ப்பிணியாக இருப்பதும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் திருப்பூருக்கு விரைந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் சூர்யாவை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.