தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இனப்பெருக்கம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மாநிலத்திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ” 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உடல் நலம், மன நலம், பழகும் தன்மை, தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம், ஆசிரியர் மாணவிகள் உறவு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நேர்மறையான மற்றும் பொறுப்பான வழிகளில் பதிலளிக்க உதவும் திறன்களை வளர்க்க வேண்டும்.
மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடையே பொறுப்பான நடத்தைக்கு வழிவகுக்கும் முறைகள், மக்கள் தொகை மற்றும் மேம்பாட்டு பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பெற்றோர் மற்றும் சமூகத்தினரிடையே சுமூக உறவுகளை மேம்படுத்துதல், இனப்பெருக்கம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் குறித்தக் கருத்துகளை முறைப்படுத்துதல் போன்றவை நோக்கமாக உள்ளன.
மாணவிகளின் உணர்ச்சிக் கட்டுப்பாடு முறைகளைத் திறம்பட நிர்வகிக்கப் பழகுதல், பெண்கள் பூப்படைத்தல் மற்றும் விழிப்புணர்வு, பூப்படைந்த பின் ஏற்படும் பெண்களுக்கான சமூகப் பாகுபாடுகளை விளக்க வேண்டும். ஒவ்வொரு மாணவியின் மன நலம் மற்றும் தனிக்கவனம் செலுத்த வேண்டிய மாணவிகளுக்கு, தனியாக குறிப்பேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.
பள்ளிகளில் வளரிளம் பருவம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தின்படி தமிழகத்தில் உள்ள 5,711 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தலா ஒரு ஆசிரியை நியமனம் செய்ய வேண்டும் ” என அதில் தெரிவித்துள்ளார்.