தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்தது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள இடையக்குறிச்சி பகுதியில் 26 வயதுடைய சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் இவரது நண்பர்களான ராமு, செல்வமணி, கோவிந்தராசு ஆகியோரும் இணைந்து முந்திரி காடுகளில் தேன் எடுப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் முள்ளக்குறிச்சியில் உள்ள காட்டிற்கு தேன் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் சுபாஷ் சந்திர போஸ் தேனை எடுப்பதற்காக ஏறிய போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுபாஷ் சந்திரபோஸை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சுபாஷ் சந்திரபோஸின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் சுபாஷ் சந்திர போசின் உடலைப் பெற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் இறந்ததற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.