சர்வதேச கால்பந்து வீராங்கனையான சங்கீதாவிற்கு விளையாட்டு அமைச்சகம் உதவிக்கரம் நீட்டி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்பாத்தி உள்ள பசமுடி கிராமத்தை சேர்ந்தவர் கால்பந்து வீராங்கனையான சங்கீதா சோரன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், கால்பந்து போட்டியில் இந்திய அணியில் 18 – 19 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடி உள்ளார் அத்துடன் ஜூனியர் அளவிலான போட்டிகளிலும் இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் அவருக்கு கடந்த ஆண்டு, இந்திய கால்பந்து அணியில் சீனியர் பிரிவிற்கு அழைக்கப்பட்டார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு விதிகள் அமல்படுத்தப்பட்டதால், அந்த வாய்ப்பு கைகூடவில்லை. அதோடு வீட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் வேறு வழியின்றி அவர் செங்கல் சூளைக்கு தினக்கூலி வேலைக்காக சென்றார் . அவர் வேலை பார்த்துக் கொண்டும் கிடைக்கும் நேரத்தில் அருகில் உள்ள மைதானத்திற்கு சென்று கால்பந்து பயிற்சியையும் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் பெண்கள் தேசிய ஆணைய தலைவரான ரேகா ஷர்மா ,ஒரு சர்வதேச கால்பந்து வீராங்கனை நிதி நெருக்கடியால் படும் கஷ்டத்தை சுட்டிக்காட்டி ஜார்கண்ட் மாநில அரசுக்கும், இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கும் கடிதம் எழுதி அனுப்பினார். இதுதொடர்பான தகவலை அறிந்த மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு கால்பந்து வீராங்கனைக்கு உதவிக்கரம் நீட்டினார். இதுபற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘கால்பந்து வீராங்கனை கொரோனா காலத்தில், நிதி உதவியின்றி கஷ்டப்படுவதாக எனக்கு தகவல் வந்தது . இதுதொடர்பாக எனது அலுவகம் சங்கீதாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளது . கூடியவிரைவில் அவருக்கு நிதி உதவி வழங்கப்படும்’ என்று அவர் தெரிவித்தார். ‘ஒரு விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் கௌரவமான வாழ்க்கை இருப்பதை உறுதி செய்வதே எங்களுடைய நோக்கமாகும்’ என்று அவர் கூறினார்.