ட்ரம்பின் பதவி நீக்க தீர்மானம் குறித்து செனட் சபையில் மும்முரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்காக நாடாளுமன்றத்தில் ஜோ பைடனுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பெரும் கலவரத்தில் சென்று முடிந்தது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஜனவரி 13-ஆம் தேதி பிரதிநிதிகள் சபையில் ட்ரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஜோ பைடன் பதவியேற்பு விழா காரணமாக செனட் சபையில் இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செனட் சபையிலும் ட்ரம்பின் பதவி நீக்கம் தொடர்பான தீர்மானம் விவாதத்திற்கு வந்துள்ளது. இந்தத் தீர்மானம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதா என்பது குறித்து வாக்கெடுப்பு நடந்துள்ளது. அதில் 44 பேர் செல்லாது எனவும் 56 பேர் செல்லும் எனவும் வாக்களித்துள்ளனர்.
அதன் பின் நடந்த விவாதத்தின்போது ட்ரம்ப் தரப்பு வழக்கறிஞர் டேவிட் சோய்ன் கூறியதாவது ட்ரம்பின் பதவி காலம் முடிந்த பிறகும் இந்த தீர்மானம் கொண்டு வந்தது அரசியலமைப்புக்கு எதிரான செயலாகும். மேலும் இதனால் தேசம் இரண்டாக உடைய வாய்ப்பு உள்ளது என்று கூறினார். இதனையடுத்து செனட் சபையிலும் இந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது இரு தரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைக்க தலா 16 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையில் தீர்மானம் வெற்றி பெற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது.