வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் உள்ள துறையூர் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில் வாய்ப்பளிக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடப்போவதாக அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சி நிறுவன தலைவர் பொன். முருகேசன் கூறியுள்ளார்.
திருச்சி பிரஸ் கிளப்பில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சி நிறுவன தலைவர் பொன். முருகேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சியானது 2000ஆம் ஆண்டு முதல் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் இந்த கட்சி பதிவு செய்யப்பட்டது.
அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சிக்கு காலணி சின்னத்தை கேட்டு பெற்றுள்ளோம். தற்போது நாங்கள் திமுக கட்சியுடன் கூட்டணியில் உள்ளோம். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒரு வாய்ப்பு கேட்டுள்ளோம். திமுக கட்சி இந்த தொகுதியை எங்களுக்கு என்று ஒதுக்கி கொடுத்தால் தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அந்த தொகுதியில் ஒரு மாபெரும் வெற்றியை காண்போம்.
துறையூர் தொகுதியை எங்களுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் தேவேந்திரகுல வேளாளர் சங்கம், சிறு சிறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் அந்த தொகுதியில் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட காலணி சின்னத்திலே போட்டியிடுவோம். துறையூர் தொகுதியில் எங்கள் கட்சிக்கு பொதுமக்களின் ஆதரவு உள்ளது.” என்று கூறியுள்ளார்.