நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும் பிரபல யூடியூபருமான சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக எதிர்த்திருக்கிறார்.
யூடியூபரான சாட்டை துரைமுருகன், இணையதளங்களில் வதந்தியை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி மற்றும் தமிழ்தேசிய ஊடகவியலாளராக இருக்கும் சாட்டை துரைமுருகன் மீது திமுக அரசு குண்டர் சட்டம் போட்டிருப்பது அதிகார வெறியாட்டத்தின் உச்சம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் மீது பழிவாங்கும் போக்குடன் குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சம்!https://t.co/wEf8enLxdK pic.twitter.com/sSMguCmovG
— சீமான் (@SeemanOfficial) January 3, 2022
தம்பி துரைமுருகன், இணையதளங்கள் மூலமாக அளவில்லாத தாக்கத்தை ஏற்படுத்துவதை சகித்துக் கொள்ள முடியாமல், சிறை தண்டனையின் மூலமாக அவரை உளவியல் ரீதியாக அச்சுறுத்தி, முடக்குவதற்கு எண்ணும், திமுக அரசின் கொடுங்கோன்மை போக்கு கண்டனத்திற்குரியது என்று கூறியிருக்கிறார்.
மேலும், ஜனநாயகத்தின் மீது, பற்று கொண்டவர்கள், கருத்துரிமைக்கு எதிரான ஆளும் கட்சியின் இது போன்ற கடும் போக்கை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு அணி சேர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.