சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அருகே மகன் இறந்த சோகத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அடுத்த ஒரு இசாகத்தாதேவி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம். இவர் ஒரு விவசாயி. இவரின் மனைவி குருவம்மாள். இந்த தம்பதிகளுக்கு 4 மகன்கள் 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் முனிரத்தினத்தின் இரண்டாவது மகன் கிருஷ்ணசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.
மகனின் உடலை பார்த்த முனிரத்தினம் கதறி கதறி அழுதார். அப்போது திடீரென்று சுருண்டு விழுந்தார். அவரை எழுப்ப முயன்றும் அவர் எழும்பவில்லை. இதையடுத்து மகன் இறந்த சோகத்தில் அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தந்தை, மகன் இருவரது உடலையும் ஒரே குழியில் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.