Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பு தொழிற்சாலை..!!

தமிழ்நாட்டில் இந்திய-ரஷ்ய நிறுவனங்கள் இணைந்து ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தியாவுக்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீவ் சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘2019-ல் இந்திய மாணவர்கள் கல்விக்காக ரஷ்யா செல்வது 30 விழுக்காடு அதிகரித்துள்ளது. மொத்தமாக 1,200 மாணவர்களுக்கு கல்வி விசா வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 90 விழுக்காடு பேர் மருத்துவ படிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டு விழாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் வருவதாக வெளியான தகவல்கள் தவறானது. அது ஒரு மாவட்ட அலுவலர் பேசியதை வைத்து பரப்பப்படுகிறது. ரஷ்யா சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுவும் வெளியிடப்படவில்லை.

உலக நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதார கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில் நாங்கள் புதிய சந்தைகளைத் தேடி வருகிறோம். அந்த வகையில் இந்தியா நல்ல சந்தை. ரஷ்ய அதிபர் புதினும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுதான் இந்த ஆண்டின் மிக முக்கியமான நிகழ்வு.

இதில், 2025-க்குள் இரு நாடுகள் இடையே 30 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய இலக்கு என்றாலும் சாத்தியமான இலக்கு என்றே சொல்ல வேண்டும். 2018-ல் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் 11 பில்லியன் டாலராக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 17.3 விழுக்காடு வளர்ச்சியாகும்.

ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு 7.8 பில்லியன் டாலர் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு 3.2 பில்லியன் டாலராக உள்ளது. தொழில் நுட்பக்கருவிகள், நிலக்கரி, கச்சா எண்ணெய், ரசாயனம் ஆகியவற்றின் வர்த்தகம் வளர்ச்சி கண்டுள்ளது’ என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய இந்தியா-ரஷ்யா வர்த்தக சபை பொதுச் செயலாளர் தங்கப்பன், ‘தமிழ்நாட்டில் ரஷ்ய தொழில்நுட்பத்துடன் ராணுவ வீரர்களுக்கு எடை குறைந்த குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள வரும் பிப்ரவரி மாதம் இந்தியா-ரஷ்யா வர்த்தக சபையை சேர்ந்த குழு ஒன்று ரஷ்யா செல்கிறது. இந்த திட்டம் பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில் அமைய வாய்ப்புள்ளது.

மேலும் லித்தியம்-ஐயான் பேட்டரியை இந்திய ரஷ்ய நிறுவனங்கள் இணைந்து கூட்டாக தயாரிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுகிறது. இவற்றுக்கு பிரேசில் அல்லது சீனாவில் இருந்து மூலப் பொருட்கள் கொண்டுவரப்படும். ரஷ்யாவில் இந்தியப் பொருட்களுக்கு நல்ல வரவேற்புள்ளது. பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நேரத்தில் இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கும், ரஷ்யாவிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் பொருட்களுக்கும் வரியை நீக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்’ என்று கூறினார்.

Categories

Tech |