ஆலையின் சுடு சாம்பலில் தவறி விழுந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காளியம்மன் கோவில் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் மாடுகளை மேய்ச்சலுக்காக எமப்பேர் ஏரிக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது அந்த ஏரியில் அரிசி ஆலையிலிருந்து வாகனங்கள் மூலமாக சூடு சாம்பல் கொண்டு வரப்பட்டு கொட்டி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதில் வெங்கடேஷ் எதிர்பாராவிதமாக தவறி விழுந்துள்ளார்.
இதில் வெங்கடேஷுக்கு தீக்காயம் ஏற்பட்டதினால் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கே அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத காரணத்தினால் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து ஏரியில் சுடு சாம்பலைக் கொட்டிய டிராக்டர் ஓட்டுநர் சிவா என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.