சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 13 பேரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் காவல்துறையினர் கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி, சிப்காட் தொழிற்பேட்டை, சின்னஓபுளாபுரம் மாந்தோப்பு, தண்டலச்சேரி, தேர்வழி, மாதர்பாக்கம் ஏரிக்கரை, ரெட்டம்பேடு வலைக்கூண்டு, சிந்தலகுப்பம், முனுசாமிநகர், நாயுடுகுப்பம் மதகு போன்ற பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சக்திவேல், சிவக்குமார், ஆனந்த், ராஜேந்திரன், மோகன், கீழ்முதலம்பேடு குமார், சிந்தலகுப்பம் சங்கர், மாதர்பாக்கம் ஜேம்ஸ், பூங்குளம் லோகநாதன், நெல்வாய் திருநாவுக்கரசு, நாயுடுகுப்பம் சுப்பிரமணி, பேரையூர் முருகன், வேல்முருகன் போன்ற 13 பேர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 13 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 142 மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.