பறிமுதல் செய்யப்பட்ட 812 மதுபாட்டில்களை கீழே ஊற்றி காவல்துறையினர் அழித்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஒரு சிலர் மாவட்ட எல்லைகளை தாண்டி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வருகின்றனர். மேலும் ஒருசில இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் காவல்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு மதுகடத்துபவர்களை பிடித்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 812 மது பாட்டில்களில் இருந்த மதுவை மடத்துக்குளம் காவல் நிலையம் அருகில் காவல்துறையினர் கீழே ஊற்றி குழிதோண்டி அழித்தனர். மேலும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தீவைத்து காவல்துறையினர் அழித்தனர்.