கீரபாக்கத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீரப்பாக்கம் கிராமத்தில் கல்லாங்குத்து வகைப்பாடு உள்ள சுமார் 20 ஏக்கர் அரசு நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக மாவட்ட கலெக்டராக ராகுல் நாத்திற்கு பல புகார்கள் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து கலெக்டர் உத்தரவின்படி, தாம்பரம் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் மேற்பார்வையில், வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள் 3 பொக்லைன் இயந்திரத்துடன் அந்த கிராமத்திற்கு சென்றுள்ளனர். அதன்பின் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து மீட்டுள்ளனர்.
மேலும் அதே பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஒரு வீட்டை தாசில்தார் அகற்ற சென்றபோது பெண் ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியபோது, கீரப்பாக்கம் கிராமத்தில் மீட்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 45 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறியுள்ளார். அதே கிராமத்தில் ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டி இருக்கின்றனர். இந்த ஆக்கிரமிப்புகள் இன்னும் சில தினங்களில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அகற்றும் பணி தொடங்கபடுவதாக தாசில்தார் தெரிவித்துள்ளார். அப்போது வருவாய் ஆய்வாளர் ரங்கன் மற்றும் அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.