சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி மனோகரன், ஜெயகுமார் மற்றும் காவல்துறையினர் ரயில் நிலையத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெங்களூர்- சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்தப் பெட்டியில் சந்தேகத்தின்படி இருந்த 2 வாலிபர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பானல்சங்கரி பகுதியைச் சேர்ந்த பிரபு, வேலூர் பள்ளகொள்ளை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் கர்நாடக மாநில மதுபாட்டில்களை காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தியதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பிரபு, விஸ்வநாதன் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 100 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி முத்துவிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்திய பிரபு, விஸ்வநாதன் இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.