தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததாக கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாதுளம்பேட்டை தெருவில் ராஜ்குமார்-மலர்க்கொடி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மலர்க்கொடி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் கர்ப்பபை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு பின் மலர்க்கொடிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் நாங்கள் சரியாகத்தான் அறுவை சிகிச்சை செய்து இருப்பதாக மலர்க்கொடியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் மலர்க்கொடி தனது 2 மகள்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார்.
இதனையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை, மலர்கொடி நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததால் நான் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். மேலும் உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றேன். எனவே தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மலர்கொடி மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மனு அளித்து விட்டு வந்த மலர்கொடி திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனை பார்த்த பொதுமக்கள் சிலர் ஓடிவந்து மலர்கொடி முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தனர்.
அதன்பின் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரும் அங்கு விரைந்து சென்று மலர்கொடிக்கு உதவி செய்தனர். இதனைதொடர்ந்து மலர்கொடியே நிழலில் அமர வைத்து கலெக்டர் அலுவலக மருத்துவ முகாமில் வேலையிலிருந்த டாக்டருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி மருத்துவர் அங்கு விரைந்து சென்று மலர்க்கொடியை பரிசோதனை செய்தார். அதன்பிறகு மலர்கொடியை அரசு மருத்துவமனைக்கு சென்று உடல்நிலையை பரிசோதித்து கொள்ளும்படி மருத்துவர் அறிவுரை வழங்கினார்.