சந்திரமுகி 2 திரைப்படம் கைவிடப்பட்டதாக பரவிய தகவலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார் .
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி . இயக்குனர் பி .வாசு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஜோதிகா ,நயன்தாரா ,பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் 700 நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் பட்டைய கிளப்பியது . இதையடுத்து பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
ஆனால் இதன் பிறகு இந்த படம் குறித்த வேறு எந்த அறிவிப்பும் வெளியாகாததால் ‘சந்திரமுகி 2’ கைவிடப்பட்டதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது . இந்நிலையில் ‘இந்த தகவல் உண்மையில்லை என்றும் ,பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திட்டமிட்டபடி உருவாகும் எனவும் நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார் . தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ படத்தில் நடித்து வருகிறார் .