கடந்த ஓர் ஆண்டில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து 3 உலக கோப்பையை நழுவ விட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்களுக்கும் சரி , ரசிகர்களுக்கும் சரி உலக கோப்பை என்பது என்றுமே தீரா தாகம். குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மட்டுமே நடைபெறும் இந்த போட்டிகளை வென்று கோப்பைகளை கைகளில் தவழ வைக்க அணிகள் மேற்கொள்ளும் சவால்கள் கடினமானவை. அவ்வாறு சவால்களை சந்தித்து ஓர் ஆண்டுக்குள் இந்தியா தவறவிட்டு இருக்கும் கோப்பைகள் 3. ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை போட்டி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை, மகளிர் 20 ஓவர் உலக கோப்பை என மூன்றையும் இந்தியா இறுதிக் கட்டங்களில் நழுவவிட்டுள்ளது வேதனையான ஒன்று.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2019ஆம் ஆண்டு மே இறுதி முதல் ஜூலை மாதம் பரபரப்பாக நடைபெற்ற ஆடவர் உலக கோப்பை தொடரில் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்துடன் போராடி தோல்வியடைந்தது. தோனிக்கு பிறகு கோலி தலைமையில் கோப்பையை வசமாகவும் என்ற ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவு, இந்திய அணியின் முதல் அரைமணி நேரத்தின் மோசமான ஆட்டத்தால் தகர்ந்தது.
சீனியர்கள் தவறவிட்ட கோப்பையை ஜூனியர்கள பிரிவில் இளம் சிங்கங்கள் வென்றெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கை 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை மீது படர்ந்தது. தொடரில் வலுவான அணியாக வலம் வந்த இந்திய இளம்படை வங்கதேச அணியுடனான இறுதிப்போட்டியில் சொதப்பியது. இறுதிவரை போராடியும் கோப்பையை முத்தமிட முடியாமல் தாயகம் திரும்பியது இளையோர் படை.
ஆண்கள் பிரிவில் கோப்பையை தவறினாலும் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் வாகை சூடிய ஜொலிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உச்சம் பெற்றது. எதிர்பார்ப்பு அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் இறுதிப்போட்டிக்குள் சிங்க நடையிட்டு நுழைந்தது இந்திய மங்கையர் படை. வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் வழக்கமாக சொதப்பியது இந்தியா. சொந்தமண் சொந்த மக்கள் மத்தியில் அதிரடி காட்டிய ஆஸ்திரேலியாவிடம் 85 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்தியா.
மூன்று உலகக் கோப்பை தொடர்களில் கிரிக்கெட் வல்லுனர்களால் கோப்பையை வெல்லும் அணியாக கணிக்கப்பட்ட அணிகளில் முதன்மை பெற்றிருந்தது இந்தியா. இருப்பினும் முக்கிய கட்டங்களில் கோப்பையை கோட்டை விட்டது ரசிகர்களுக்கு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலைகளில் நடைபெற இருக்கும் ஆடவர் 20 ஓவர் உலக கோப்பை தொடரில் வியூகங்களை சரிவர வகுத்து ரசிகர்களின் கோப்பை தாக்கத்தை இந்திய அணி தவிர்க்குமா ? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.