திடீரென்று பெய்த கடும் மழையின் காரணமாக 3,000 ஏக்கரில் நடைபெற்றுக் கொண்டிருந்த உப்பு உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சி நிறுவியது. அதேவேளையில் கடற்கரையோரங்களில் பெய்த கன மழையால் 3000 ஏக்கரில் நடந்த உப்பு உற்பத்தியின் ஒரு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்ததால் அவர்கள் சேர்த்து வைத்திருந்த உப்பை பிளாஸ்டிக் பைகள் கொண்டு மூடி பாதுகாத்து வைத்துள்ளனர்.
முன்னதாக வெயிலின் காரணமாக கடந்த ஒரு மாதம் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்டதனால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதேபோல் மீண்டும் அவர்கள் உப்பு உற்பத்தியை தொடங்குவதற்கு குறைந்தபட்சம் ஐந்து அல்லது ஆறு நாட்கள் ஆகும் என உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.