அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் இந்திய மாணவி சொந்த ஊருக்குச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் கவுதம்புத்நகர் மாவட்டத்தில் உள்ள தாத்ரி என்ற பகுதியில் சுதிக்ஷா(20) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் ரூ.4 கோடி உதவித்தொகையுடன் அமெரிக்காவிற்கு மேல்படிப்பு செல்வதற்காக சென்றிருக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, தன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். நேற்று அவர் தன்னுடைய மாமா சத்யேந்தருடன் புலந்த்ஷெரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது ஏற்பட்ட திடீர் விபத்தால், வாகனத்திலிருந்து கீழே விழுந்த சுதிக்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி அவரின் குடும்பத்தார் கூறும்போது, “இருசக்கர வாகனத்தில் சுதிக்ஷா சென்று கொண்டிருக்கும் போது, புல்லட்டில் இரண்டு இளைஞர்கள் அவரை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் சுதிக்ஷாவை மிகவும் மோசமான வார்த்தைகளை பேசி கேலி செய்துள்ளனர். ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் சுதிக்ஷா சென்றிருக்கிறார். அதனால் அவரின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக அந்த இரண்டு இளைஞர்களும் புல்லட்டிலேயே சாகசம் செய்துள்ளனர். பின்னர் அருகில் வந்து மிரட்டியதால், தனது கவனம் சிதறி கீழே விழுந்த சுபிக்ஷா உயிரிழந்துவிட்டார்” என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சரியான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெண்ணை ஈவ் டீசிங் செய்த இரண்டு இளைஞர்களையும் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.