சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கும் நெற்பயிர்களை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் அறுவடை செய்த நெற்பயிர்களை விற்பதற்காக விவசாயிகள் அதை சாலை ஓரங்களில் குவியல் குவியலாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் உள்ள தெலுங்கன்குடிக்காடு, புதூர் உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எதிரே சாலை ஓரங்களில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சாலை ஓரங்களில் நெற்பயிர்கள் குவிக்கப்பட்டு இருப்பதால் அங்கு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து தெலுங்கன்குடிக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியபோது “அறுவடை முடிந்ததும் கொள்முதல் நிலையங்களில் பதிவு செய்து நெல்லை விற்பனை செய்வதற்கு கிட்டத்தட்ட 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் நெற்பயிர்கள் நனைந்து சேதமடைகிறது.
எனவே நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார். இதனையடுத்து தெலுங்கன்குடிக்காடு, புதூர் உள்ளிட்ட சில ஊர்களில் கூடுதல் பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் மூலமாக விரைவில் நெல்லை கொள்முதல் செய்து குடோனுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இரு தினங்களில் சாலை ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்கள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.